இன்று ஆடி அமாவாசை: சிறப்பு தகவல் தொகுப்பு

ஆடி அமாவாசை பற்றிய தகவல்கள், வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் காலத்தை தான் அமாவாசை என்கிறோம். ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இரு கிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு இந்த வருடம் (இன்று ) 20.7.2020 திங்கள் கிழமை வருவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தாய், தந்தை இழந்தவர்கள் அமாவாசை, தினங்களில் வழிபடுகின்றனர். அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் தாயை இழந்தவர்களும் வழிபடுவது தமிழர்கள் பின்பற்றி வரும் ஒரு வழக்கமாகும்.

அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தை மாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசை திதிக்கு அதிக சிறப்பு உண்டு. தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசை திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம். தமிழர்களுக்கு ஆடி அமாவாசை மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும்.

அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய்க்கு அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.

இத்தினத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்கு தானமும், விருந்தினர், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரத கொள்கையுடன் இருப்பர்.

சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்பு பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன. அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளை தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும், சித்திரை பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும் சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றை செய்வர்.

இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

இதன் காரணமாக அமாவாசை திதியில் சிலவற்றை செய்யும் போது குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

மனித பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்த பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனை தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டற கலக்க முடியாது.

ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியை தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று( ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்கள் நிவர்த்தியாகின்றன.

இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசை திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒருவேளை முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.

பிதுர் தர்ப்பணத்தின் முக்கியத்துவம்:

இன்று ஆடி அமாவாசை ஆகும். அமாவாசை என்பது இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

அமாவாசையில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆடி மாதமும், தை மாதமும் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும், பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.

ஆடி அமாவாசையன்று, பித்ரு எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.

பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும். எனவே, ஆடி அமாவாசையன்று மறக்காமல் உங்கள் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்யுங்கள் மறைந்த மூதாதையர்களின் ஆசி, உங்களுக்கு நிரம்பகிடைக்கட்டும்.

தர்ப்பணம் செய்வது எப்படி?

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது என சொல்லப்படுவதுண்டு. பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது தமிழர்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது. (தகவல்கள் தொகுப்பு: தமிழர் லிங்க் அட்மின்)