ஆன்மிகம்: ஆடி மாதம் பிறந்தது சிங்கப்பூரில் ஆடி மாத பூஜைகள் உண்டா?

ஜூலை 16, வியாழக்கிழமை இன்று ஆடி மாதம் பிறந்து விட்டது. பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். இம்முறை கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் எப்போதும் போல் சிறப்பாக இருக்குமா என்பது சந்தேகமே.

சிங்கப்பூரில் உள்ள அம்மன் கோவில்களில் ஒரு சில சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. யிஷுன் மகா மாரியம்மன் கோவில் தமிழர் லிங்கிற்கு அளித்த தகவலில் ஜூலை 24 வரை தினமும் பால் குடமும், வேம்பு அம்மன் சிறப்பு அர்ச்சனை நடைபெறும் என்று தெரிவித்தது.

சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள கோவிலில் அம்மனுக்கு ஆடி கூழ் சமர்ப்பணம் செய்யும் சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் 9 ம் தேதி, சிங்கப்பூர் தேசிய தினத்தன்று நடக்கும் என கோவில் நிர்வாகம் தகவல் அளித்தது.

ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே சரியானது.

ஆடி மாதம் பற்றிய குறிப்புகள் சில:

ஆடி மாதம் வந்தாலே தமிழ்நாட்டில் பல கடைகளில் ஆடி தள்ளுபடி உண்டு குறிப்பாக துணிக்கடைகளில் ஆடி தள்ளுபடி தவறாமல் தருவார்கள்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடக்கிறன. ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மழையை பொழிய செய்யும் கடவுளாக மாரியம்மனை தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள். மாரி என்பது மழை என்பதையே குறிக்கும். மாதம் மும்மாரி பொழிகிறதா என்பது ஒரு சொல்வழக்கு.

நாடு செழிக்க வேணும், நல்ல மழை பெய்ய வேணும். ஊரு செழிக்க வேணும், உலக மக்கள் வாழவேணும், என உடுக்கை அடித்து அம்மனிடம் கோரிக்கை வைப்பது அக்கால தமிழர்களின் மரபு.

ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, பௌவுர்ணமி, ஆடி பூரம், ஆடி சுவாதி என ஆடியில் எல்லா நாளுமே விசேஷங்கள் தான்.

பொதுவாகவே வெள்ளி கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.