‘இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்கிறேன்’, பத்ம பூஷண் விருது பெற்ற கூகுள் CEO சுந்தர் பிச்சை
கூகுள் மற்றும் ஆல்பாபெட் CEO சுந்தர் பிச்சைக்கு, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷண் நேற்று (டிசம்பர்.3) அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவரால் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருது பெற்ற 17 பேரில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். மதிப்புமிக்க விருதை சுந்தர் பிச்சை ஏற்றுக்கொண்டபோது, “இந்தியா எனது ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் அவருக்கு 2022 ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. சான்பிரான்சிஸ்கோவில் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.
“இந்த மகத்தான கவுரவத்திற்காக நான் இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வடிவமைத்த நாட்டினால் நான் இந்த வகையில் கௌரவிக்கப்படுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்று 50 வயதான சுந்தர் பிச்சை கூறினார்.
கற்றல் மற்றும் அறிவைப் போற்றும் குடும்பத்தில் வளர்ந்ததால் தான் அதிர்ஷ்டசாலி் என்றும் தன் ஆர்வங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை உறுதிப்படுத்த தன்னுடைய பெற்றோர்கள் நிறைய தியாகம் செய்தனர் என்றும் பிச்சை கூறினார்.
வணிகங்கள் டிஜிட்டல் மாற்றத்திற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துகின்றன, மேலும் கிராமங்கள் உட்பட முன்பை விட அதிகமான மக்கள் இணைய அணுகலைப் பெற்றுள்ளனர் என்று பிச்சை கூறினார்.
இந்திய பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வை நிச்சயமாக அந்த முன்னேற்றத்திற்கு ஒரு முடுக்கியாக உள்ளது, மேலும் இரண்டு தசாப்தங்களாக அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுடன் கூட்டு சேர்ந்து கூகுள் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்வதில் பெருமைப்படுவதாக அவர் கூறினார்.
(Image credit: IndiaTVnews)