தமிழகத்தை மிரட்டிய மாண்டூஸ் புயல் சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது..!!

10 சென்டிமீட்டர் மழைப்பொழிவையும், மணிக்கு 65 கிமீ-85 கிமீ வேகத்தில் வீசிய மாண்டூஸ் புயல், நேற்று (டிசம்பர்.9) இரவு 9. 30 மணியளவில் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் கிழக்குக் கரையைக் கடந்தது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) அதிகாரிகள் கரையை கடக்கும் செயல்முறை முடிவடைய கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆகும் என்றும், அது முழுவதுமாக நிலத்தின் மீது நகரும் என்றும் தெரிவித்தனர். 122 ஆண்டுகளில் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் 13வது புயல் மாண்டூஸ் ஆகும்.

இந்த புயல் வடமேற்கு திசையில் திருவண்ணாமலையை நோக்கி தொடர்ந்து பயணித்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும என்று மண்டல வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் ஜெனரல் எஸ் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தரையிறங்கிய மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இந்த அமைப்பு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் அது அரபிக்கடலில் வெளிப்படுவதற்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற இரண்டு நாட்கள் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் 200 மரங்கள் வேரோடு சாய்ந்தன. எனினும், அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலையிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

முன்னதாக புயல் கரையை கடப்பதை முன்னிட்டு, மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 13 உள்நாட்டு மற்றும் மூன்று சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

உலக வானிலை அமைப்பின் (WMO) உறுப்பினராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இந்த புயலுக்கான பெயரை வைத்தது. அரபு மொழியில், இது “புதையல் பெட்டி” என்று பொருள்படும் மற்றும் “Man-Dous” என்று உச்சரிக்கப்படுகிறது.

(Image credit: ET)