இளையவரை காப்பாற்ற தன் மருத்துவமனை படுக்கையை தந்து, வெளியேறி தன்னுயிரை துறந்த முதியவர் !!! 😨😨😨

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் 85 வயதான ஒரு முதியவர், 40 வயதான கோவிட் நோயாளிக்கு தனது மருத்துவமனை படுக்கையை தந்து அவரை காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

நாராயண் தபல்கர் என்ற அந்த முதியவரை அவ்வாறு செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் கண்டிப்பாக எச்சரித்தபோதும் அவர் தானாக நாக்பூர் மருத்துவமனையை விட்டு வெளியேறினார். தொண்டுள்ளம் கொண்ட அந்த முதியவர் தன் வீட்டில் கடந்த திங்களன்று(ஏப்ரல்.26) மரணமடைந்தார்.

கடுமையான கோவிட் 19 அறிகுறிகள் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு காரணமாக ஏப்ரல் 22 ம் தேதி நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் தபல்கர் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், ஓரிரு மணிநேரங்களுக்கு பிறகு, மருத்துவ ஆலோசனையை மீறி வெளியேற முடிவெடுத்து வீட்டிற்கு சென்றார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது, ஒரு பெண் அழுவதையும், தனது 40 வயது கணவரை அனுமதிக்கும்படி கெஞ்சி நின்றதையும் பார்த்தார். அந்த பெண்ணின் குழந்தைகளும் கூட அழுது கொண்டிருந்தார்களாம்.

எனவே அவருக்கு உதவி செய்யும் நோக்கில், தன்னை விட இளையவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தபல்கர் தனது படுக்கையை காலி செய்தார்.

எனக்கு வயது 85. என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். ஒரு இளைஞனின் உயிரை காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது. அவர்களின் குழந்தைகள் இளமையாக இருக்கிறார்கள். தயவுசெய்து என் படுக்கையை அவர்களுக்கு கொடுங்கள் என்று அவர் மருத்துவர்களிடம் கூறினார் என்று சொல்லப்படுகிறது. இந்த மனம் எல்லோருக்கும் வருமா? அந்த முதியவரின் ஆத்மா நிச்சயம் சாந்திடையும்.

(Image credit: India.com)