ICA அதிகாரிக்கு தொற்று கண்டறியப்பட்டதால் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் 32 அதிகாரிகள் தனிமைபடுத்தப்பட்டனர் !!!

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் குடியுரிமை மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) அதிகாரிக்கு கடந்த ஏப்ரல் 27 அன்று கோவிட் உறுதி செய்யப்பட்டதை பற்றியும் அதை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் ICA விளக்கமளித்துள்ளது.

தொற்று ஏற்பட்ட அந்த அதிகாரி தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) தங்கியுள்ளார். தேவையான உதவிகளை வழங்க அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ICA, தொடர்பில் உள்ளதாக கூறியுள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் பயணிகளுக்கான வருகையை அனுமதிக்கும் கவுண்டரில் நிறுத்தப்பட்ட அவருக்கு ஒவ்வாமை காரணமாக மருத்துவர் ஆலோசனைப்படி கோவிட் தடுப்பூசி போடப்படவில்லை.

பாதிக்கப்பட்ட அதிகாரியுடன் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 32 ICA அதிகாரிகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சாங்கி விமான நிலைய முனையம் 1 ல் நிறுத்தப்பட்ட சுமார் 100 ICA அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக கோவிட் சோதனை செய்யப்படவுள்ளது.

அதிகாரி வழக்கமாக தொடர்பில் இருக்கும் பொதுவான மற்றும் ஊழியர்கள் பகுதிகள் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த ICA சாங்கி விமான நிலைய குழுவுடன் (CAG) இணைந்து பணியாற்றியதாக கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 2021 முதல், மருத்துவரீதியாக தகுதியுள்ள ICA அதிகாரிகள் தங்களையும், தங்கள் அன்புக்குரியவர்களையும், சக ஊழியர்களையும் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வலுவாக ஊக்குவிக்கப்படுகிறார்கள் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1, 2021 நிலவரப்படி, சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளில் 92 சதவீதம் பேர் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்று குடியுரிமை மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.