சுய சோதனை (ART) முடிவு ‘பாசிட்டிவ்’ வந்த ஊழியர்களுக்கு மருத்துவ சான்றிதழ் (MC) தேவையில்லை, ஊழியர்களுக்கான வேலை மற்றும் விடுப்பு ஏற்பாடுகள் பற்றி MOM விளக்கம்

சிங்கப்பூர்: சுய சோதனை முடிவு (ART) -பாசிட்டிவ் வந்து ஆனால் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஊழியர்களுக்கு சுய-தனிமைப்படுத்தலின் போது வேலை மற்றும் விடுப்பு ஏற்பாடுகள் குறித்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழிகாட்டுதலை மனித வள அமைச்சகம் (MOM) வழங்கியுள்ளது.

சுய சோதனை முடிவு (ART) -பாசிட்டிவ் வந்து ஆனால் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஊழியர்கள் 72 மணிநேரம் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். முதல் முறை ART சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்ற பிறகு, இந்த ஊழியர்கள் உறுதிப்படுத்தும் PCR ஸ்வாப் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

72 மணிநேர சுய-தனிமைப்படுத்தலுக்கு பிறகு, ஊழியர் ART சோதனையை மீண்டும் செய்ய வேண்டும். முடிவு நெகட்டிவ் ஆக இருந்தால், ஊழியர் வேலை மற்றும் தினசரி நடவடிக்கைகளுக்கு திரும்பலாம். இருப்பினும், முடிவு பாசிட்டிவ் ஆக இருந்தால், சுய தனிமைப்படுத்தலை தொடர வேண்டும், மேலும் ஊழியர் நெகட்டிவ் ART முடிவை பெறும் வரை ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் மற்றொரு ART சோதனை செய்ய வேண்டும்.

ஊழியர்கள் ART யில் பாசிட்டிவ் சோதனை செய்து வீட்டிலேயே தங்கள் தனிமைப்படுத்தலை தொடங்கும் போது உடனடியாக தங்கள் நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். முதலாளிகள் ART பாசிட்டிவ் முடிவுடன் ஆனால் உடல் ரீதியாக நன்றாக உள்ள ஊழியர்களை வேலையிடத்திற்கு செல்ல அறிவுறுத்தக்கூடாது..

வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியமில்லை என்றால், மருத்துவ சான்றிதழ் தேவையில்லாமல், ஊதியத்துடன் கூடிய வெளிநோயாளர் விடுப்பு அல்லது மருத்துவமனை சிகிச்சை விடுப்பு என இந்த காலத்தை முதலாளிகள் கருத வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு ஊதியமற்ற விடுப்பு எடுக்குமாறு ஊழியர்களை கேட்கக்கூடாது. 72 மணி நேரத்திற்கு பிறகு நெகட்டிவ் ART முடிவை பெறும்போது ஊழியர்கள் வேலையிடத்திற்கு திரும்பலாம் என கூறப்பட்டுள்ளது.

ART பாசிட்டிவ் முடிவுடன் குடும்ப உறுப்பினர்களை கொண்ட ஊழியர்கள், தங்கள் உடல்நலத்தை 10 நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும் மற்றும் வழக்கமான ART சுய பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களின் ART சுய சோதனை முடிவுகள் நெகட்டிவாக இருக்கும் வரை இந்த ஊழியர்களுக்கு எந்த நடமாட்ட கட்டுப்பாடுகளும் இல்லை என MOM விளக்கமளித்துள்ளது.

(Image credit: Yahoo)