டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கான நிவாரண நிதி (CDRF) மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது – LTA

சிங்கப்பூர்: புதிய பாதுகாப்பு மேலாண்மை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கான ஓட்டுநர் நிவாரண நிதி (CDRF) அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நில போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

தற்போதைய கோவிட்-19 நிலைமையை நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளில் சிங்கப்பூர் அரசாங்கம் இருக்கு வேளையில், கோவிட் -19 ஓட்டுநர் நிவாரண நிதியை (CDRF) நவம்பர் 2021 வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதன் மூலம் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களை தொடர்ந்து ஆதரிக்கப்படுவார்கள் என்று LTA தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் 31 வரை ஒரு வாகனத்திற்கு S$10 வெள்ளியும், நவம்பர் 1 முதல் 30 வரையான காலத்திற்கு ஒரு வாகனத்திற்கு S$5 வெள்ளியும் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

ஓட்டுநர் நிவாரண நிதியை (CDRF) தற்போது பெறும் ஓட்டுநர்கள் தானாகவே இந்த ஆதரவு நிதியை பெறுவார்கள், இதற்காக விண்ணப்பிக்க தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்க கூடுதல் S$23.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சுமார் 50,000 ஓட்டுனர்களுக்கு பயனளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது பிப்ரவரி 2020 முதல் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் துறைகளுக்கு ஆதரவாக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையை, சுமார் S$500 மில்லியனாக கொண்டு வருகிறது.