சிங்கப்பூரில் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள், ஏற்கனவே தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஆகியோரும் கோவிட் தடுப்பூசி பெற பரிந்துரை…!

சிங்கப்பூர்: இப்போது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களும் தடுப்பூசி போடலாம் என்று கோவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

தடுப்பூசிக்கு அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் எப்போது சிறப்பாக வேலை செய்யும் என்று உறுதிப்படுத்த உதவுவதற்காக, இந்த பிரிவை சேர்ந்த நோயாளிகள் தங்களது சிகிச்சையளிக்கும் நிபுணரிடமிருந்து அவர்களின் தடுப்பூசிக்கான தகுதி பற்றிய குறிப்பை பெற்று தடுப்பூசி போடுவதற்கு முன்பு தடுப்பூசி ஊழியரிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் கீமோதெரபி, இம்யூனோ தெரபி அல்லது கதிரியக்க சிகிச்சையில் உள்ள நோயாளிகள் அல்லது அடுத்த இரண்டு மாதங்களில் சிகிச்சைக்கு திட்டமிட்டுள்ளவர்களும் தடுப்பூசி பெறலாம்.

கடந்த மூன்று மாதங்களுக்குள் திட உறுப்பு அல்லது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் புற்றுநோய் அல்லாத நிலைமைகளுக்கான தீவிர நோயெதிர்ப்பு சிகிச்சையில் உள்ள நோயாளிகளும் தடுப்பூசி பெறலாம்.

எச்ஐவி(HIV) பாதிக்கப்பட்ட நபர்களும், CD4 எண்ணிக்கையைப பொருட்படுத்தாமலும், மருத்துவர் குறிப்பு தேவையில்லாமலும் தடுப்பூசி பெறலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட பிரிவினர், மருத்துவமனையிலோ அல்லது சமூக தடுப்பூசி மையங்களிலோ தடுப்பூசி போடலாம்.

நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருக்கலாம். எனவே, அவர்கள் தொற்றுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம், இதில் நெரிசலான இடங்களை தவிர்ப்பது மற்றும் நல்ல கை சுகாதாரத்தை கடைப்பிடிப்பது ஆகியவை அடங்கும் என MOH கூறியுள்ளது.

வீட்டிலுள்ள மற்றவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களை சுற்றியுள்ள நபர்கள் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க தடுப்பூசி போடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் குணமடைந்த நபர்கள், கோவிட்-19 தடுப்பூசியை போட்க்கொள்ளலாம். நோய் தொற்று ஏற்பட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒரு டோஸ் தடுப்பூசி பெற பரிந்துரைக்கப்படுகிறது. இது முன்பிருந்த ஆறு மாத காலத்திலிருந்து இருந்து குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பரிந்துரைகளினால், மேலும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு தடுப்பூசி போடலாம். எனவே நிபுணர் குழு அனைத்து தகுதி வாய்ந்த நபர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பதாக கூறியுள்ளது.