அக்டோபர் 27 முதல் சிங்கப்பூர் வரும் வேலை அனுமதி பெற்றவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டிய MOMன் புதுப்பிக்கப்பட்ட தேவைகள் !!!

சிங்கப்பூர்: நேற்று (அக்.23) இந்தியா உட்பட சில ஆசிய நாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பையடுத்து வேலை அனுமதி அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கான நுழைவு தேவைகளை மனித வள அமைச்சகம் (MOM) புதுப்பித்துள்ளது.

அக்கோடபர் 26 ம் தேதி 23:59 மணிக்கு முன் இந்தியாவுக்கு பயண வரலாற்றை கொண்டவர்களுக்கு சிங்கப்பூர் வர நுழைவு அனுமதி கிடையாது. மேலும் நவம்பர் 1 க்கு முன் சிங்கப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி தேவை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

1 நவம்பர் முதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் அனைத்து வகையான வேலை அனுமதி வைத்திருப்பவர்களும் (கட்டுமானம், மெரைன் செயல்முறை தொழிலாளர்கள்(CMP), மற்றும் உதவியாளர்கள் மற்றும் சிறைச்சாலை உதவியாளர்கள் உட்பட), சிங்கப்பூர் வருவதற்கு முன் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என MOM தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நுழையும் அன்று 18 வயதுக்குட்பட்ட வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் மருத்துவ நிலைமைகள் காரணமாக தடுப்பூசி போட முடியாத வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என MOM கூறியுள்ளது.

அக்டோபர் 27 முதல் சிங்கப்பூர் வருபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை பின்வருமாறு:

சிங்கப்பூருக்கு வேலை அனுமதியில் அல்லது வேலை அனுமதி ஒப்புதல் கடிதம் (IPA) பெற்று வர இருக்கும் தொழிலாளர்கள், முதலாளி மூலமாக சிங்கப்பூர் வர நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். (அது கிடைத்தால் மட்டுமே மற்ற ஏற்பாடுகளை செய்யலாம் என்பதை கவனத்தில் கொள்க. )

சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் கோவிட் -19 அங்கீகரிக்கப்பட ஆய்வகத்தில் சோதனை எடுக்க வேண்டும். சோதனை முடிவு ஆங்கிலத்தில் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்புடன் இருக்க வேண்டும். கோவிட் PCR சோதனை முடிவு, சோதனை தேதி, வேலை அனுமதி வைத்திருப்பவரின் பெயர்,பிறந்த தேதி அல்லது பாஸ்போர்ட் எண் ஆகிய விவரங்களை கொண்டிருக்க வேண்டும்.

சிங்கப்பூர் வந்த பிறகு SHN பிரத்யேக வசதிகளில் (SDF கள்) 10 நாட்கள் தங்கும் அறிவிப்பை (SHN) முடிக்க வேண்டும். 10 நாள் முடிவடைவதற்கு முன் கோவிட் -19 ஸ்வாப் சோதனை செய்யப்பட வேண்டும். பிரத்யேக வசதியில் தங்குவதற்கான கட்டணமான S$1450 வெள்ளியையும், ஸ்வாப் சோதனை கட்டணமாக S$125 வெள்ளியையும் முதலாளி செலுத்த வேண்டும்.

10 நாட்கள் SHNக்குப் பிறகு MWOC ல் 4 நாட்கள் ஆன்போர்டிங் திட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் சிங்கப்பூர் வந்த 14 நாட்களுக்குள் ஒரு பொது சுகாதார க்ளினிக்கில் செரோலஜி சோதனை எடுக்க வேண்டும். இது வெளிநாட்டில் தடுப்பூசி போடப்பட்டது என்பதை உறுதிப்படுத்த எடுக்கப்படும் சோதனையாகும் என மனித வள அமைச்சகம் (MOM) தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.