ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் அசல் கோவிட் வைரஸ் இரண்டிற்குமான தடுப்பூசியாக மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள பூஸ்டர் தடுப்பூசியை HSA அங்கீகரித்தது.!!

சிங்கப்பூர்: கோவிட் மற்றும் ஓமிக்ரான் கோவிட் இரண்டு வைரஸ்களுக்குமான தடுப்பூசியாக மாடர்னா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Spikevax Bivalent என்ற தடுப்பூசிக்கு தொற்றுநோய் சிறப்பு அணுகல் பாதையின் (PSAR) கீழ் இடைக்கால அங்கீகாரத்தை சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) நேற்று (செப்.14) வழங்கியுள்ளது.

SARS-CoV-2 வைரஸ் மற்றும் ஓமிக்ராப் BA.1 வகை வைரஸ்களை இலக்காகக் கொண்ட மாடர்னாவின் Spikevax Bivalent தடுப்பூசி ஒவ்வொன்றும் 25 மைக்ரோகிராம்கள் கொண்ட இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசிகளுடன் முதல் இரண்டு டோஸ்கள் தடுப்பூசியைப் பெற்ற, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாகப் பயன்படுத்த இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் ஓரே ஒரு டோஸ் ஆக போடப்படும்.

ஆரம்பத்தில் பரவிய SARS-CoV-2 வைரஸை இலக்காகக் கொண்ட 25 மைக்ரோகிராம்கள் மற்றும்
ஓமக்ரான் BA.1 மாறுபாட்டை இலக்காகக் கொண்டு 25 மைக்ரோகிராம்கள் மருந்து இந்த தடுப்பூசியில் இருக்கும்.

தடுப்பூசிக்கான மாடர்னாவின் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகளின் தரவை ஆய்வு செய்ததாக HSA கூறியது, மேலும் வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால், கோவிட்-19 க்கு எதிராக பாதுகாப்பதற்கான பூஸ்டராக Spikevax Bivalent தடுப்பூசியைப் பயன்படுத்தினால் ஏற்படும் அபாயங்களை விட நன்மைகள் அதிகமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.

Spikevax Bivalent தடுப்பூசியை பெறும் நபருக்கான பக்க விளைவுகள் சோர்வு, தலைவலி மற்றும் தசை வலி போன்ற அசல் மாடர்னா தடுப்பூசிக்கு ஏற்படுவதை போலவே இருக்கும், மேலும் அவை பொதுவாக சில நாட்களுக்குள் குறைந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் தடுப்பூசி கிடைக்கச் செய்ய HSA மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக மாடர்னா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, ஜப்பான், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, தைவான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதன் Spikevax Bivalent தடுப்பூசிகள் இன்றுவரை பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

(Image credit: IndiaTVNews)