ஜான்சன் & ஜான்சனின் கோவிட் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் FDA அவசரகால ஒப்புதல் !!!

அவசரகால பயன்பாட்டிற்காக ஜான்சன்& ஜான்சனின் கோவிட் -19 தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கான மூன்றாவது தடுப்பூசியாக அமெரிக்காவிற்கு இது உதவும்.

FDAவின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கொடுக்கப்பட்டதால் ஜே & ஜே நிறுவனம், கிட்டத்தட்ட 4 மில்லியன் டோஸை அடுத்த வாரம் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், மருந்தகங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களுக்கு விநியோகிக்கும் அமெரிக்க அரசின் திட்டத்தை தொடங்க உதவும்.

பைசர் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகளை போலன்றி, ஜே & ஜே வின் ஒரு-டோஸ் தடுப்பூசி போட்டு கொள்பவர்கள், இரண்டாவது டோஸுக்காக திரும்ப தேவை இல்லை. மேலும் இது பல மாதங்களுக்கு சாதாரண குளிர்சாதன பெட்டி வெப்பநிலையில் வைக்கப்படலாம்.

ஜூன் மாத இறுதிக்குள் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க அமெரிக்க அரசு ஜே & ஜே நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் அமெரிக்க அதிகாரிகள் ஜே & ஜே நிறுவனத்துடன் இணைந்து விரைவாக விநியோகத்தை அதிகரிக்க செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

100 மில்லியன் டோஸுக்கு $1 பில்லியன் டாலருக்கு மேல் செலுத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டது, மேலும் 200 மில்லியன் டோஸ்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது.

ஜே & ஜே நிறுவனம் கோவக்ஸ் கூட்டணியுடன் இணைந்து ஏழை நாடுகளுக்கு 500 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.