ஜூராங்கில் உள்ள கடையில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த சம்பவம், 5 மணி நேரத்தில் சந்தேகத்துக்குரிய நபர் கைது !!

சிங்கப்பூர்: ஜூராங்கில் ஆயுதம் ஏந்தி கொள்ளை அடித்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 38 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 12, 2021 அன்று மாலை 3.55 மணியளவில், ஜுராங் கேட்வே சாலையில் உள்ள OT credit கடையில் ஆயுதம் ஏந்திய கொள்ளை வழக்கு குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில், சிங்கப்பூரரான மகாதி முஹம்மது முக்தர் என்ற அந்த நபர், அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் துண்டு சீட்டை காட்டி கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது, அந்த குறிப்பில், “இது ஒரு கொள்ளை, கத்த வேண்டாம், என் சட்டை பையில் துப்பாக்கி உள்ளது. எல்லா பணத்தையும் பையில் வைக்கவும் ” என எழுதப்பட்டிருந்தது.

இதனால் ஊழியர்கள் அந்த நபரிடம், S$24,000 க்கும் அதிகமான பணத்தை ஒப்படைத்தனர், பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

விரிவான விசாரணைகள் மூலம் மற்றும் பொலிஸ் கேமராக்கள் மற்றும் கடை சிசிடிவிக் படங்களின் உதவியுடன், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர்.

திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அந்த நபர் தனது 34 வயது பெண் நண்பரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருடப்பட்ட பணத்தை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றுவதற்கு அந்த பெண் உதவி செய்ததாகவும், தண்டனை சட்டத்தின் பிரிவு 411 ன் கீழ் திருடப்பட்ட சொத்தை நேர்மையற்ற முறையில் பெற்றதற்காக அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக இதே குற்றத்திற்காக 16 முதல் 48 வயதுக்குட்பட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதி சுமார் S$17,500 மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திருடப்பட்ட பணத்தை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன. போலீஸ் விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

(Image credit: OT credit)