சிங்கப்பூரில், வரும் செப்டம்பர் மாதம் 27 முதல், சமூக கூட்டங்களுக்கான குழு அளவு 2 ஆக குறைக்கப்படுகிறது !!!

சிங்கப்பூர்: சமூக கூட்டங்களுக்கான அனுமதிக்கப்பட்ட குழு அளவு அதிகபட்சம் 5 நபர்களிடமிருந்து அதிகபட்சம் 2 நபர்களாக குறைக்கப்படுவதாக கோவிட்டுக்கான அமைச்சர் குழு தெரிவித்துள்ளது.

அடுத்த 2 வாரங்களுக்குள் தினசரி தொற்று எண்ணிக்கை 3,200 மற்றும் அதற்கு மேல் எட்டலாம் என்று எதிர்பார்ப்பதால் 27 செப்டம்பர் முதல் 24 அக்டோபர் வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு வீட்டுக்கு செல்லும் பார்வையாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஒரு நாளைக்கு 2 ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர்கள் தங்கள் ஒட்டுமொத்த சமூக கூட்டங்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 1 க்கு மிகாமல் வைத்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது,

வேறு வீடுகளுக்கு அல்லது நண்பர்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் பொது இடத்தில் சந்திப்பதை தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சமூக நடவடிக்கைகளை குறைக்கவும், முகக்கவசங்களை தொடர்ந்து அணியவும் அனைத்து நபர்களையும் ஊக்குவிப்பதாக அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, முதியவர்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வேலை, உணவு மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவது, மருத்துவரை பார்ப்பது, மற்றும் கூட்டமில்லாத இடங்களில் தனித்தனியாக உடற்பயிற்சி செய்வது போன்ற அத்தியாவசியமான செயல்பாடுகளை தவிர்த்து, முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு அவை மதிப்பாய்வு செய்யப்படும், பின்னர் சமூக சூழ்நிலையின் அடிப்படையில் அவை சரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

(Image credit: Yahoo)