உணவை உட்கொண்ட பிறகு 284 நபர்களுக்கு இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டதால் உணவகத்தின் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது – SFA

சிங்கப்பூர்; கடந்த நவம்பர் 8 மற்றும் 16 க்கு இடையில் Rasel Catering சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் தயாரித்த உணவை உட்கொண்ட பிறகு 284 நபர்களுக்கு ஏற்பட்ட இரைப்பை குடல் அழற்சி சம்பவங்கள் குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள், சுயமாக மருந்து எடுத்துகொண்டார்கள், சிலர் வெளிநோயாளர் சிகிச்சைக்கு சென்றார்கள் சிலர் சிகிச்சையின்றி குணமடைந்தனர். யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை.

சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, 253 பாண்டன் லூப் சிங்கப்பூர் 128432 என்ற முகவரியில் அமைந்துள்ள Rasel Catering Singapore Pte Ltdன் உணவு வணிக நடவடிக்கைகளை 18 நவம்பர் 2022 முதல் மறு அறிவிப்பு வரும் வரை SFA இடைநிறுத்தியுள்ளது.

உபகரணங்கள் மற்றும் பாத்திரங்கள் உட்பட வளாகத்தை சுத்தம் செய்து சுத்தப்படுத்தவும், உண்ணத் தயாரான உணவு மற்றும் அழுகக்கூடிய உணவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதையும் அந்த உணவகம் செய்ய வேண்டும் என SFA கூறியுள்ளது.

அந்த உணவகம் மீண்டும் பணியைத் தொடங்குவதற்கு முன் அங்கு பணிபுரியும் அனைத்து உணவு கையாளும் ஊழியர்களும் மீண்டும் உணவுப் பாதுகாப்புப் பாடநெறி நிலை 1 ல் தேர்ச்சி பெற வேண்டும், உணவில் பரவும் நோய்க்கிருமிகளுக்கான சோதனை எதிர்மறையாக இருக்க வேண்டும்.

வளாகத்தில் பணிபுரியும் நியமிக்கப்பட்ட உணவு சுகாதார அலுவலரும் உணவு சுகாதார அலுவலராக மீண்டும் பணியைத் தொடங்குவதற்கு முன், உணவுப் பாதுகாப்பு பாடநெறி நிலை 3-ல் மீண்டும் கலந்துகொண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்று SFA கூறியுள்ளது.

(Image source: Google map)