தடுப்பூசி பெற்ற பின் மரணமடைந்த 72 வயதான பெண் மாரடைப்பால் தான் இறந்தார், MOH விளக்கம்

சிங்கப்பூர்: கோவிட் தடுப்பூசி பெற்ற அடுத்த நாள் மரணமடைந்த 72 வயதான பெண் குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) விளக்கமளித்துள்ளது.

ஜூன் 4 ம் தேதி மாலை, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற அந்த மூதாட்டி மரணமடைந்தது பற்றி சுகாதார அமைச்சகத்திற்கு செங்காங் பொது மருத்துவமனை (SKH) எச்சரித்தது.

ஜூன் 3 ஆம் தேதி பைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை அந்த மூதாட்டி பெற்றார். தடுப்பூசிக்கு முன்னர் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஏற்றவராக பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்களால் அவர் மதிப்பீடு செய்யப்பட்டார். MOH நெறிமுறைகளுக்கு ஏற்ப, தடுப்பூசிக்கு பின்பு சுமார் 30 நிமிடங்கள் அவர் கண்காணிக்கப்பட்டதில், நன்றாக இருந்தார்.

பிரேத பரிசோதனை நடத்திய கொரோனருக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டதில், இறப்புக்கான காரணம் இஸ்கிமிக் இதய நோய் என்று தீர்மானிக்கப்பட்டது. குறுகலான இதய தமனிகளால் ஏற்படும் இதய பிரச்சினைகளுக்கு இவ்வாறு சொல்லப்படுகிறது.

பிரேத பரிசோதனையில் இதய தசைகளுக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களின் நீண்டகால அடைப்பு கண்டறியப்பட்டது, இது தடுப்பூசி மூலம் ஏற்பட முடியாது. தடுப்பூசிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை.

கொரோனர் சுகாதார அமைச்சிலிருந்து சட்டபூர்வமாக தனியாகவும் சுயாதீனமாகவும் இருக்கிறார், மேலும் மரணத்திற்கான உறுதியான காரணத்தை தீர்மானிக்கிறார்.

செங்காங் பொது மருத்துவமனை (SKH) குடும்பத்தினருக்கு உதவி வழங்கியுள்ளது. தேவைக்கேற்ப சுகாதார அமைச்சகமும் உதவ முன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடினமான நேரத்தில் குடும்பத்திற்கு எங்கள் உண்மையான இரங்கலை தெரிவித்து கொள்வதாக MOH கூறியுள்ளது.

(Image credit: SKH)