வேலை அனுமதி பெற்றவர்கள் (work permit), அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வர நுழைவு விண்ணப்பங்கள் ஏற்கப்படாது – MOM

சிங்கப்பூர்: பல நாடுகளில் கோவிட்-19 வழக்குகள் மீண்டும் அதிகமாகுவதையும், புதிய வைரஸ் மாறுபாடுகள் தோன்றுவதையும் கருத்தில் கொண்டு, வரும் வாரங்களில் வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கான நுழைவு ஒப்புதல்களை அரசாங்கம் குறைத்து வருவதாக மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது

வரும் மே 11 செவ்வாய்க்கிழமை முதல் அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வருவதற்கு முன்னர் ஒப்புதல்களை பெற்ற வேலை அனுமதி வைத்திருப்பவர்களின் நுழைவில் மாற்றங்களை செய்வதாக MOM கூறியுள்ளது.

கட்டுமானம், மெரைன் மற்றும் செயல்முறை (CMP) துறையில் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் ஒப்புதல் பெற்றபடி சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள், ஜூன் மாதத்தில் வருகைக்கு திட்டமிட்டிருந்த ஒரு சிறிய குழுவை, சில வாரங்கள் தாமதமாக வர அனுமதிப்பற்கு MOM மறுபரிசீலனை செய்கிறது.

ஏற்கனவே ஒப்புதலை பெற்ற புலம்பெயர்ந்த வீட்டு தொழிலாளர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி அனுமதிக்கப்படுவார்கள். ஜூன் 7 ம் தேதிக்கு முன்னர் வருகைக்கு திட்டமிட்ட சிலர் மட்டும் அடுத்த வாரங்களில் சற்று தாமதமாக வருவதற்கு மறுபரிசீலனை செய்யப்படுவார்கள்.

ஜூலை 5 க்கு முன்னர் நுழைய ஒப்புதல் பெற்ற பிற வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிலைமை சீராகும்போது நுழைவுக்கு எப்போது மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று முதலாளிகளுக்கு அறிவிக்கப்படும். அதன் பின்னர் நுழைவு ஒப்புதலுக்கு அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இன்று(மே.7) முதல், பாதிக்கப்பட்ட வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளுக்கு அவர்களின் நுழைவு மாற்றங்களை பற்றி மனிதவள அமைச்சு தெரிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.

நுழைவு அனுமதியையே தள்ளிப்போடும் சூழல் உள்ளதால், முக்கிய திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான தொழிலாளர்களை தவிர, அதிக ஆபத்து உள்ள நாடுகள் / பிராந்தியங்களிலிருந்து புதிய நுழைவு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

குறைந்த ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வேலை அனுமதி் பெற்று பயண ஏற்பாடு (PCA), பரஸ்பர பசுமை பாதை (RGL) மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட பயண முறைகளில் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி பெற்றவர்கள் அல்லது பெற உள்ளவர்களுக்கு, மேற்கூறப்பட்டுள்ள மாற்றங்களால் பாதிப்பு இல்லை.

இந்த மாற்றங்கள் பற்றி வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளின் புரிதலையும் ஒத்துழைப்பையும் MOM கோரியுள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பான மற்றும் அளவான முறையில் நுழையவும், கோவிட்-19 இறக்குமதியின் அபாயத்தை தணிக்கவும் அவை அவசியம் என்று MOM தெரிவித்துள்ளது.