சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்து வருகிறது

சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் கடந்த வருடம் செப்டம்பருக்கு பிறகு தொடரந்து நான்காவது மாதமாக குறைந்துள்ளது என்று மனித வள அமைச்சர் ஜோசப்பின் தியோ கூறியுள்ளார்.

பிப்ரவரி 2021 ல் வேலையின்மை விகிதம் ஒட்டுமொத்தமாக 3.0% ஆக குறைந்தது. குடியிருப்பாளர் வேலையின்மை விகிதம் 4.1% மும் சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதம் 4.3% மும் இருந்தது. செப்டம்பர் 2020 ல் வேலையின்மை விகிதங்கள் உயர்ந்த பிறகு இது தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்து வருகிறது.

வேலையின்மை விகிதங்கள் உயர்ந்து, இன்னும் கோவிட்டுக்கு முந்தைய நிலைகளுக்கு திரும்பவில்லை என்றாலும், வேலை வாய்ப்புகளில் (Jobs Growth) நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அமைச்சர் ஜோசப்பின் தியோ கூறியுள்ளார்.

Jobs growth திட்ட அமலாக்கத்தின் முதல் மூன்று மாதங்களில் 130,000 உள்ளூர் மக்களை கூட்டாக வேலைக்கு அமர்த்திய 27,000 முதலாளிகளுக்கு சமீபத்தில் வேலை வளர்ச்சி ஊக்கத்தொகை (JGI) செலுத்தப்பட்டது.

உள்ளூர் பணியமர்த்தலை விரிவுபடுத்துவதற்கு முதலாளிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு மிகவும் மாறுபட்ட வேலை தேடுபவர்களை கருத்தில் கொள்ள அவர்களை தூண்டியுள்ளது என்பதை காண்பது ஊக்கமளிக்கிறது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், முன்பு வேலை செய்யாதவர்கள் மற்றும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.

வேலை தேடுபவர்கள் தாங்கள் முன்பு செய்யாத வேலைகளை அல்லது துறைகளை பரிசீலிக்க வேண்டியிருக்கலாம், மேலும் திறமைகளை வளர்ந்துக்கொள்ள நேரத்தை முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம், WSG உடன் இணைந்து வேலையின்மை விகிதங்களை நெருக்கமாக தொடர்ந்து கண்காணிக்கும். மேலும் உருவாக்கப்படும் வேலைகளை சிங்கப்பூரர்கள் அணுக பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அமைச்சர் ஜோசப்பின் தியோ குறிப்பிட்டுள்ளார்.

(Image source: BCA)